அறுபதாங்கோழி, காட்டின் அதிசயங்களில் ஒன்று. கோழியைப்போல் உடலும் சேவலைப்போல் வாலும் கொண்டிருக்கும். வண்ணமயமான வாங்கருவாள் போல் வாலின் இறகுகள் சிலிர்த்து நிற்கும். அது அறுபது நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டையிடும். அன்னப்பறவை சாவதற்கும் முன், ஒரே ஒருமுறை பெருங்குரல் எழுப்பிக் கூவி விட்டுச் செத்துப் போவதைப் போலத்தான் இதுவும்.
“அறுபதாங்கோழி” தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை…!!!
சாவதற்கு முன் பகற்பொழுதில் சேவலைப் போல் பெருங்குரல் எடுத்துக் கூவிவிட்டுச் செத்துப் போகும். அந்த ஓசை தான் அதை ‘அறுபதாங்கோழி’என்று அடையாளப்படுத்துவது.
ஓசை வந்த பகுதியில் தேடினால்,ஏதேனும் ஒர் இண்டு இடுக்குக்குள் செத்து கிடக்கும். அறுபதாங்கோழியைத் தான் முருகன் தனது கொடியில் வைத்திருந்தான். முன்புறம் கோழி போன்றும் பின்புறம் சேவல் போன்றும் அது காட்சியளித்தது.
அறுபதாங்கோழியின் சுவைக்கு ஈடு இணை இல்லை.அதன் கழிவில் இருந்து தான் ‘தீப்புல்’ முளைக்கும். புலி போன்ற விலங்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அதை வேட்டையாடுவது எளிதல்ல. புலி போன்ற வேட்டை விலங்குகள் அதன் சுவைக்கு மயங்கி அதன் வாசனை நுகர்ந்தபடி காட்டின் குறிப்பிட்ட பகுதியில் அலைந்து கொண்டே இருக்கும்.
புலியால் எளிதில் அறுபதாங்கோழியைப் பிடிக்க முடியாது. அதே நேரம் அதன் வாசனையை விட்டு விலகவும் முடியாது. எந்நேரமும் புதருக்குள் பதுங்கியபடியே நகர்ந்து கொண்டு கிடக்கும். தன்னைக் கடந்து போகும் மான் கூட்டத்தைக் கண்டும் புலி அமைதியாக இருக்கிறது என்றால், அங்கு அறுபதாங்கோழி இருக்கிறது என்று பொருள். புலியின் இந்த மயக்கச் செயலின் வழியே அங்கு அறுபதாங்கோழி இருப்பதைக் காடு அறிந்தவர்கள் அறிவார்கள்.