இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வங்கி கணக்கு இல்லாத மக்களே இருக்க முடியாது. அதிலும் எளிய மக்கள் பெரும் சம்பளத்தில் செலவுகள்போக ஒரு பகுதியை சேமிப்பதற்கு பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகள்.
பெரும்பாலும் அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருப்பு தொகையை தெரிந்துகொள்ள இன்னும் பலர் அஞ்சலகங்களுக்கு நேரில் தான் செல்கின்றனர். இப்போது ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விபரங்களை இருக்கும் இடத்திலேயே பெற சில வழிகள் உள்ளன.
சேமிப்பு கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்புவது அல்லது மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்துக்கொள்ளலாம்.
உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1.குறுந்தகவல் (SMS ) மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
வாடிக்கையாளர்கள் 7738062873 என்ற எண்ணுக்கு “BALANCE” என டைப் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அனுப்ப வேண்டும். சில நிமிடங்களில், உங்களது தபால் நிலைய இருப்பு விவரங்கள் அடங்கிய குறுந்செய்தி உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்தடையும்.
2.மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
வாடிக்கையாளர்கள் மொபைல் போனில் இருந்து 8424054994 என்ற எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சில நிமிடங்களில், உங்களது தபால் நிலைய இருப்பு விவரங்கள் அடங்கிய குறுந்செய்தி உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்தடையும்.
3.QR குறியீடு மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அஞ்சல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதன் பின்னர் கணக்கு இருப்பை அறியும் தேர்வை உள்ளிட வேண்டும்.
இந்த முறையினை திரும்பவும் பயன்படுத்த தபால் அலுவலகத்தில் உள்ள QR குறியீட்டை புகைப்படம் எடுத்து உங்கள் செல்போனில் சேமித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
4.IVRS(ஊடாடும் குரல் பதில் அமைப்பு) மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 155299 என்ற எண்ணிற்கு அழைத்து, அதில் கொடுக்கப்படும் பிரிவுகளில் வங்கி இருப்புத்தொகை அறியும் பிரிவின் எண்னை அழுத்தி சேமிப்பு கணக்கின் இருப்புத்தொகையை அறிந்துகொள்ளலாம்.
5.மொபைல் ஆப் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
நீங்கள் IPPB மொபைல் ஆப் பயன்படுத்துபவராக இருந்தால் இதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்துக்கொள்ளலாம்.அதுமட்டுமின்றி ஆன்லைன் பரிவர்தனைகளையும் இதன் மூலம் நீங்கள் நேரில் செல்லாமல் செய்துகொள்ள முடியும்.
6.இன்டர்நெட் பாங்கிங் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:
மற்றொரு வசதியான நெட் பேங்கிங்(Net-banking ) மூலமாகவும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு இருப்பை வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக வலைத்தளத்தின் மூலம் தங்கள் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி கணக்கில் இருக்கும் பணம் மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட விபரங்களையும் பார்வையிடலாம்.